Samstag, 3. Mai 2014

காமாட்சி எங்கள் காமாட்சி

காமாட்சி எங்கள் காமாட்சி
கருணயின் வடிவான மனங்களில்
அவள் ஆட்சி!




காமாட்சி எங்கள் காமாட்சி
கருணயின் வடிவான மனங்களில் அவள் ஆட்சி!
காமாட்சி எங்கள் காமாட்சி!

விதியேதும் வெல்லாது வினையென்று சொல்லாது
கதியேதும் இல்லாது கணநேரம்நில்லாது
அலைகடல் துரும்பென அவனியில் தினம் தினம்
அலைந்திடும் நமதுளம் மகிழ்ந்திட  துயர்கெட
கம் நகர் வந்தமர்ந்தாள் காமாட்சி!
காமாட்சி எங்கள் காமாட்சி!

இவள்முகம் பாராது இடரேதும் தீராது
இணையடி சேராது இன்பங்கள் வாராது
ஒரு தினம் ஒரு பொழு  திவள்பதம் பணிந்திட
உருகிடும் நமதுளம் அமைதியில் நிலைபெற
கம் நகர் வந்தமர்ந்தாள் காமாட்சி
காமாட்சி எங்கள் காமாட்சி

சங்கரன் துணையாகி சர்வமும் தனதாகி
இங்கொரு நிலையாகி இன்னருள் மழையாகி
தன்னிரு பதமலர் எண்ணிடும் அடியவர்
இன்னலைத் துடைத்திட இன்பங்கள் வழங்கிட
கம் நகர் வந்தமர்ந்தாள் காமாட்சி
காமாட்சி எங்கள் காமாட்சி








ஜெர்மனி - ஹம் நகரில்
கோயில் கொண்டெழுந்தருளும்
அன்னை ஸ்ரீ காமாட்சியை நினைந்து
பல வருடங்களுக்கு முன்பு
அடியேன் வரைந்த பாடல் இது.



சில வருடங்களுக்குமுன்பு வெளியான
ஹம் காமாட்சி அம்பாள் பக்திப்பாமாலை
இசைப்பேழையில்
இன்னிசைக்குரலோன்
திரு சு.நடராஜா அவர்கள்
இசையமைத்துப் பாடியிருந்தார்.

பூமுகங்களுக்காக
இதனையும்
காணொளி வடிவமாக்கித் தருகிறேன்.


-இந்துமகேஷ்

Freitag, 8. Juli 2011

காலமெல்லாம் உந்தன் புகழ்பாட



முருகனை நினைந்து மனம் கரைந்து
நான் வரைந்த பாடல்களில் ஒன்று இது.


பாடலைப் பாடியிருப்பவர்-
க.பாலசுப்பிரமணியம்


இசைதந்த கலைஞர்கள்
சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா
பேபி ஜோன்சன்
பத்மசிறீ



பூவரசு விழா மேடைகளை மெல்லிசைப்
பாடல்களால் அலங்கரிக்க வேண்டும் என்ற
எனது விருப்பத்தின் ஆரம்ப முயற்சியாக
பூவரசு 2வது ஆண்டு நிறைவு
கலை இலக்கிய பரிசளிப்பு விழா 1993 இன்
மேடையில் ஒலித்த
இந்தப் பாடலை
பூமுகங்களுக்காக
காணொளி வடிவாக்கியிருக்கிறேன்.

-இந்துமகேஷ்

Donnerstag, 7. Juli 2011

புதியதோர் உலகம் செய்வோம்!


புதியதோர் உலகம் செய்வோம்




நாடகங்களில் கவிதை நாடகம் என்று ஒரு வகை.

வசனங்கள் யாவும் கவிதைகளாய் வெளிப்படும்.


ஆனால் இது அத்தகைய கவிதை நாடகம் அல்ல.

இது எனது கவிதை ஒன்றின் நாடக வடிவம்.

பூவரசு 12வது ஆண்டு நிறைவு விழா 2003இல்
அரங்கேறியது.

எனது கற்பனைக்கு உயிரூட்டிய இளங்கலைஞர்கள்-
நிக்சன் - அருணோதயன் - சுதன்- அரவிந்தன் -தீபகன்


ந்டனப் பயிற்சி- பிரதீபா.

poovarasu kultur und Literatur Fest 2003 in Bremen, Germany..

பூமுகங்களுக்காக காணொளி வடிவாக்கித் தருகிறேன்.
-இந்துமகேஷ்.

மனிதர்களே!


அன்புகொண்ட மனிதருக்கு
அனைத்துயிரும் ஒன்றாம்
அன்பில்லாத மனிதரிலும்
விலங்குகளே நன்றாம்.



மழலையர் நடனத்தில்
உருவகக் கதை சொல்லும் உத்தியைக்
கையாளும் முயற்சியாக
எழுதப்பட்ட எனது பாடலுக்கு
பிரியங்கா -அஸ்வினி என்னும் இரு
மழலைகளும் உயிரூட்டியிருக்கிறார்கள்.

1996இல் பூவரசின் 5வது ஆண்டு நிறைவு விழாவில்
இடம்பெற்ற மழலையர் உருவக நடனத்தை
பூமுகங்களுக்காக காட்சிப்படுத்தியிருக்கிறேன்.



அன்புடன்
-இந்துமகேஷ்

Sonntag, 12. Juni 2011

ஆயிரம் பூக்கள்









ஆயிரம் பூக்கள் அர்ச்சனைக்கென்றே
அவனியில் மலருதடி - அந்தப்
பூக்களின் இதழ்களில் அன்னயின் திருவடி
கண்களில் விரியுதடி



ஜெர்மனி - ஹம் நகரில்
கோயில் கொண்டு எழுந்தருளும்
ஸ்ரீ காமாட்ஷி அம்பாளைப் போற்றி
சில ஆண்டுகளூக்கு முன்
நான் எழுதிய பாடல்களில் ஒன்று!

சுதனின் இசையில் வெளியான
புதுமை பாடும் கீதம்
இசைப்பேழையில்
இடம்பெற்றிருந்தது.

இந்தப் பாடலை
திரு சு.நடராஜா -
செல்வி பென்சியா ஞானச்செல்வம்
ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

அதனை காணொளி வடிவில்
பூமுகங்களுக்காக
தயாரித்துத் தந்திருக்கிறேன்.

-இந்துமகேஷ்.


Sonntag, 22. Mai 2011

பூமுகங்கள்- உங்கள் பார்வையில்...

பூமுகங்கள் பற்றி...
மின்னஞசல் வழி...




பூவரசின் உயிரோட்டமுள்ள
ஆவணங்கள்.
முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
மு.க.சு.சிவகுமாரன்
வெற்றிமணி-சிவத்தமிழ்
யேர்மனி.
18.05.2011




வீட்டுக்குப் போகவிடு பற்றி...

அன்பு மகேஷ்!
வணக்க்ம்.
அன்றே இததுணை நன்றாய்க் குழந்தைகளை வைத்து
ஒரு உண்மை சார்ந்த கற்பனை ஆதங்கத்தை
விலங்குகளின் சார்பாக மனிதரைச் சாடி எழுதி
ஜமாய்த்திருககிறீர்கள்
ஒளியமைப்பில் இன்னும் அதிக வண்ணங்கள் கலந்திருக்கலாம்.
குழந்தைகள் கடுமையாக உழைத்திருப்பது தெரிவதிலிருந்து
வளர்ந்தவர்களின் உழைப்பின் கடுமையை உணர முடிகின்றது.
முயல்களின் இடைவிடாத் துள்ளலை நான் மிக மிக இரசித்தேன்.
கரும்பாய் இனித்த மழலைகளின் கலையாட்டம்.

தொடருங்கள்.
காத்திருக்கிறேன்.

எழிலன்
யேர்மனி
17.05.2011



வணக்கம் அண்ணா!
எப்படி சுகங்கள்?
பூமுகங்களில் அகலம் குறைவாக உள்ளது.
அதனால் வீடியோக்கள் எழுத்துகளுடன்
செருகி காணப்படுகின்றன என நினைக்கிறேன்.
நன்றி.

அன்புடன்,
இராஜன்.
யேர்மனி
17.05.2011




( தங்கள் மடல் கிடைத்ததும் உடனே மாற்றிவிட்டேன்.
இப்போதுள்ளது தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கருத்துக்களுக்கு நன்றி!
தொடர்வோம்.

அன்புடன்
உங்கள்
இந்துமகேஷ்.